Sunday, March 17, 2024

முழு கொத்தமல்லி பொடி / தனியா பொடி !



தேவையான பொருள்கள் -

முழு கொத்தமல்லி ( தனியா ) - 1 கப் ( 100 கிராம் )
மிளகாய் வத்தல் - 10
புளி - சிறிய கோலி அளவு
பூண்டு பற்கள் - 10
கறிவேப்பிலை - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு

செய்முறை -

பூண்டு பற்களை தோலுரித்து வைத்துக்கொள்ளவும்.
அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் கொத்தமல்லியை போட்டு நன்கு வாசம் வரும் வரை வறுத்து ஒரு தட்டில் பரப்பி வைக்கவும். அதே கடாயில் மிளகாய் வத்தலை போட்டு அடுப்பை சிம்மில் வைத்து வறுத்து அடுப்பை அணைத்து விட்டு வறுத்த மிளகாய் வத்தலை மல்லியோடு சேர்த்து பரப்பி வைக்கவும்.
சூடாக இருக்கும் கடாயில் பூண்டு பற்கள், கறிவேப்பிலை, புளி, உப்பு எல்லவற்றையும் சேர்த்து சூடாக்கி அதையும் சிறிது நேரம் ஆற விடவும்.

நன்கு ஆறியதும் மிக்சியில் திரிக்கவும். திரித்த பொடியை நன்கு ஆற வைத்து பாட்டிலில் போட்டு வைக்கவும். இட்லி, தோசைக்கு
அருமையானகொத்தமல்லி பொடி ரெடி!! 



 

Sunday, May 8, 2022

அன்னையர் தினம் / Mother 's Day



இதயம் எழுதும் கவிதை நீ !

எங்கும் நிறைந்த புதுமை நீ !

பாய்ந்து வரும் நதியும் நீ !

மதிய நேர தென்றல் நீ!

மண்ணில் உலவும் தேவதை நீ !

புதிய உலகில் பழமை நீ !

பூத்து நிற்கும் தாய்மை நீ !

அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள் !

Tuesday, March 31, 2020

வெஜ் முட்டை சப்பாத்தி / Veg egg Chapathi



தேவையான பொருள்கள் -
  1. சப்பாத்தி - 3
  2. முட்டை - 1
  3. காலி பிளவர்( - 2 மேஜைக்கரண்டி 
  4. மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி 
  5. காஷ்மீரி மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி 
  6. தக்காளி சாஸ் - 1 மேஜைக்கரண்டி 
  7. உப்பு - சிறிது 
  8. மல்லித்தழை - சிறிது 
தாளிக்க -
  1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. பெரிய வெங்காயம் - 1
செய்முறை -
  1. சப்பாத்தியை சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும். வெங்காயம், காலிபிளவர், மல்லித்தழை மூன்றையும்  பொடிதாக நறுக்கி வைக்கவும்.
  2. அடுப்பில் ஒரு கடாயை வைத்து  ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் முட்டையை உடைத்து எண்ணெய்யில் ஊற்றி  அதனுடன் சிறிது உப்பும் சேர்த்து பொடிமாஸ் செய்து தனியே வைத்துக்கொள்ளவும். 
  3. அடுப்பில் அதே கடாயை வைத்து மீதமுள்ள 2 மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
  4. பிறகு அதனுடன் 1/4 கப் தண்ணீரும், காலிபிளவர், மற்றும் சிறிது உப்பும் சேர்த்து கிளறி அடுப்பை சிம்மில் வைத்து மூடி வைக்கவும் 
  5. காலிபிளவர் வெந்ததும் மிளகாய் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், தக்காளி சாஸ் சேர்த்து ஒரு நிமிடம் கிளறி அதனுடன் முட்டை பொடிமாஸ், சப்பாத்தி துண்டுகள் சேர்த்து நன்றாக கிளறவும்.
  6. இறுதியில் மல்லித்தழை சேர்த்து நன்றாக கிளறி அடுப்பை அணைக்கவும். சுவையான வெஜ் முட்டை சப்பாத்தி ரெடி. காலை டிபனாகவும், குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்சில் வைத்தும் கொடுக்கலாம்.

Friday, October 26, 2018

மிக்ஸர் சட்னி / Mixture Chutney


பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. மிக்ஸர் - 1/2 கப் 
  2. தேங்காய் துருவல் - 1/4 கப் 
  3. மிளகாய் வத்தல் - 1
  4. உப்பு - சிறிது 
தாளிக்க -
  1. நல்லெண்ணெய் - 2 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1 தேக்கரண்டி 
  3. கறிவேப்பிலை - சிறிது 
செய்முறை -
  1. எல்லா பொருள்களையும் மிக்சியில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி  அரைக்கவும்.
  2. அடுப்பில் கடாயயை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை சேர்த்து சட்னியில் ஊற்றி நன்றாக கலக்கி விடவும். இட்லி, தோசைக்கு சுவையான மிக்ஸர் சட்னி ரெடி

Tuesday, October 16, 2018

காலிபிளவர் கூட்டு / Cauliflower Kootu



பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. நறுக்கிய காலிபிளவர் - 1/2 கப் 
  2. சாம்பார் பொடி - 1 மேஜைக்கரண்டி
  3. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
  4. உப்பு - தேவையான அளவு
  5. மல்லித்தழை - சிறிது
அரைக்க -
  1. தேங்காய் துருவல் - 1/4 கப் 
  2. தக்காளி - 1
  3. சின்ன வெங்காயம் - 6
தாளிக்க -
  1. எண்ணெய் - 3 தேக்கரண்டி 
  2. கடுகு - 1 தேக்கரண்டி 
  3. உளுந்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
  4. நறுக்கிய வெங்காயம் - சிறிது
  5. கறிவேப்பிலை - சிறிது
செய்முறை -
  1. தேங்காய் துருவல், தக்காளி, சின்ன வெங்காயம் மூன்றையும் ஒன்றாக சேர்த்து மிக்சியில் அரைக்கவும்.
  2. ஒரு வாயகன்ற பாத்திரத்தில் காலிபிளவர் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி வேகவிடவும். வெந்ததும் அதனுடன் சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பச்சை வாடை போகும் வரை நன்கு கொதிக்க விடவும்.
  3. பச்சை வாடை போனதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை சேர்த்து கூட்டு கெட்டியானதும் மல்லித்தழை சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
  4. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் கூட்டில் சேர்த்து கலக்கி விடவும்.
  5. சாம்பார் சாதம், ரசம் சாதத்திற்கு சுவையான காலிப்ளவர் கூட்டு ரெடி.

Friday, September 28, 2018

பாசிப்பயறு தோசை / Green Gran Dosa / Pesarattu Dosa


பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. பாசிப்பயறு - 1 கப் ( 200 கிராம் )
  2. பச்சரிசி - 1/2 கப் ( 100 கிராம் )
  3. உப்பு - தேவையான அளவு 
அரைக்க -
  1. தேங்காய் துருவல் - 1/2 கப் 
  2. சின்ன வெங்காயம் - 5
  3. மிளகாய் வத்தல் - 3
  4. சீரகம் - 1 தேக்கரண்டி 
செய்முறை -
  1. பாசிப்பயறு, பச்சரிசி இரண்டையும் தனித்தனியாக 4 மணி நேரம் ஊறவைக்கவும். ஊறிய பிறகு இரண்டையும் ஒன்றாக சேர்த்து அதனுடன் உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கிரைண்டரில் அரைத்து 6 மணி நேரம் புளிக்க வைக்கவும்.
  2. தோசை சுடுவதற்கு முன் தேங்காய் துருவல், சின்ன வெங்காயம், மிளகாய் வத்தல், சீரகம் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிக்சியில் அரைத்து மாவில் நன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும்.
  3. அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடானதும் ஒரு கரண்டி மாவு எடுத்து ஊற்றி விரித்து சுற்றிலும் எண்ணெய் விடவும்.வெந்ததும் மறுபுறம் திருப்பி போடவும். இருபுறமும் வெந்ததும் எடுத்து சூடாக தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.
Related Posts Plugin for WordPress, Blogger...