Thursday, March 28, 2013

வாழைக்காய் புட்டு


பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. வாழைக்காய் - 1
  2. தேங்காய் துருவல் - 2 மேஜைக்கரண்டி
  3. உப்பு - தேவையான அளவு                               
தாளிக்க -
  1. கடுகு - 1/2 மேஜைக்கரண்டி
  2. உளுந்தம் பருப்பு - 1/4தேக்கரண்டி
  3. பெரிய வெங்காயம் - 1/2
  4. மிளகாய் - 2
  5. கறிவேப்பில்லை - சிறிது
  6. எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி                        
செய்முறை -
  1. அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து 2 கப் தண்ணீர் ஊற்றி அதில் வாழைக்காயைப் போட்டு 10 நிமிடம் வேக வைக்கவும்.
  2. வெந்ததும் காயை வெளியில் எடுத்து தோலை நீக்கிக் கொள்ளவும். அதன்பின் வாழைக்காயை துருவியில் வைத்து துருவிக் கொள்ளவும்.           
  3.  துருவிய வாழைக்காயில் உப்பு, தேங்காய் துருவல் போட்டு கலந்து  வைக்கவும்.
  4. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்ததும் உளுந்தம் பருப்பு, கறிவேப்பில்லை மிளகாயை ஒவ்வொன்றாக போட்டு தாளிக்கவும்.
  5. பின்னர் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கி அடுப்பை ஆப் செய்யவும். இப்பொது துருவி வைத்திருக்கும் வாழைக்காய் கலவையை சேர்த்து கிளறி விடவும்.                                                                    வாழைக்காய் புட்டு ரெடி.

Thursday, March 21, 2013

எள்ளுப் பொடி / Ellu Podi

தேவையான பொருள்கள்  -
  1. எள் - 100 கிராம்
  2. மிளகாய் வத்தல் - 6
  3. புளி - 1 (எலுமிச்சை பழம் அளவு)
  4. பூண்டு - 10 பல்
  5. உப்பு - 1 1/2 மேஜைக்கரண்டி
  6. கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு
  7. எண்ணெய் - 1 தேக்கரண்டி                          
செய்முறை -
  1. அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் எள்ளைப் போட்டு வறுக்கவும். எள் வெடித்து நின்றதும் அதை தனியாக எடுத்து வைக்கவும்.
  2. அதே கடாயில் 1 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி மிளகாய் வத்தலை வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.
  3. பின்னர் புளி, பூண்டு ஆகியவற்றைத் தனித்தனியாக போட்டு வறுக்கவும்.
  4. கடைசியாக அடுப்பை அணைத்து விட்டு அதே கடாயில் கறிவேப்பிலையைப் போட்டு ஓரிரு வினாடிகள் வதக்கி எடுத்து கொள்ளவும்.                         
  5. ஆறிய பின்னர் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸ்சியில் போட்டு அதனுடன் உப்பையும் சேர்த்து பொடித்து கொள்ளவும்.
  6. எள்ளுப் பொடி ரெடி. இது இட்லி, தோசை, தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும். காற்று புகாத பாட்டிலில் போட்டு ஒரு மாதம் வரை உபயோகிக்கலாம்.              

இட்லிப் பொடி / Idly Podi



தேவையான  பொருள்கள் -
  1. தோல் உளுந்து அல்லது முழு உளுந்து - 100 கிராம்
  2. துவரம் பருப்பு - 50 கிராம்
  3. கடலைப் பருப்பு - 50 கிராம்
  4. சீரகம் - 2 மேஜைக்கரண்டி
  5. மிளகாய் வத்தல் - 10
  6. பூண்டு - 10 பல்
  7. கறிவேப்பில்லை - ஒரு கைப்பிடி
  8. உப்பு - 1 1/2 மேஜைக்கரண்டி
  9. எண்ணெய் - 1 தேக்கரண்டி                                                         
செய்முறை -
  1. கடாயை அடுப்பில் மிதமான தீயில் வைத்து சூடானதும் உளுந்தம் பருப்பைப் போட்டு நன்கு சிவக்கும் வரை வறுத்தெடுக்கவும்.
  2. வறுத்த உளுந்தம் பருப்பைப் தனியாக எடுத்து வைத்து விட்டு அதே கடாயில் 1 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் மிளகாய் வற்றலை போட்டு வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.
  3. பின்னர் துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, பூண்டு ஆகியவற்றைத்  தனித்தனியாக போட்டு நன்கு வறுத்தெடுக்கவும்.சீரகத்தை வறுக்கத் தேவை இல்லை.
  4. கடைசியாக அடுப்பை அணைத்து விட்டு அதே கடாயில் கறிவேப்பிலையைப் போட்டு ஓரிரு வினாடிகள் வதக்கி எடுத்து கொள்ளவும்.
  5. ஆறிய பின்னர் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸ்சியில் போட்டு அதனுடன் உப்பையும் சேர்த்து பொடித்து கொள்ளவும்.                     
  6. இட்லிப் பொடி ரெடி. இதை தோசை/இட்லியோடு சேர்த்து சாப்பிடலாம். காற்று புகாத பாட்டிலில் போட்டு ஒரு மாதம் வரை உபயோகிக்கலாம்.

Tuesday, March 19, 2013

சாம்பார் பொடி / Sambar Podi


தேவையான பொருள்கள் -
  1. மிளகாய் வத்தல் - 1/4 கிலோ
  2. கொத்தமல்லி - 300 கிராம்
  3. சீரகம் - 100 கிராம்
  4. துவரம் பருப்பு - 50கிராம்
  5. கடலைப் பருப்பு - 50 கிராம்
  6. மிளகு - 25 கிராம்
  7. வெந்தயம் - 25 கிராம்
செய்முறை -
  1. முதலில் மிளகாய் வத்தலை வெயிலில் நன்கு காய வைக்க வேண்டும்.
  2. கொத்தமல்லி, சீரகம், துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, மிளகு, வெந்தயம் ஆகியவற்றை தனித் தனியாக ஒரு வாணலியில் போட்டு நன்றாக வறுத்து கொள்ளவும். கருக விடாமல் மிதமான தீயில் வைத்து வறுத்து கொள்ளவும்.
  3. வத்தல் காய்ந்ததும் எல்லாப் பொருள்கள்களையும் ஒன்றாக சேர்த்து மெசினில் கொடுத்து அரைக்கவும்.
  4. இந்த சாம்பார் பொடியை சாம்பார், புளி குழம்பு, கூட்டு மற்றும் அனைத்து குழம்பு வகைகளுக்கும் உபயோகிக்கலாம்.
  5. காற்று புகாத பாட்டிலில் போட்டு 5 மாசம் வரை உபயோகிக்கலாம்.

இட்லி சாம்பார்

பரிமாறும் அளவு - 3 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. பாசிப்பருப்பு - 50 கிராம்
  2. பெரிய வெங்காயம் - 1
  3. தக்காளி - 1
  4. பச்சை மிளகாய் - 2
  5. மிளகுத் தூள் -  1/2 தேக்கரண்டி
  6. சீரகத் தூள் - 1/2 தேக்கரண்டி
  7. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
  8. வெந்தயத் தூள் - 1 தேக்கரண்டி
  9. பெருங்காயத் தூள் - 1/4 தேக்கரண்டி
  10. உப்பு - தேவையான அளவு
  11. மல்லித்தழை - சிறிது
தாளிக்க -
  1. நல்லெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
  2. கடுகு - 1/2 தேக்கரண்டி
  3. கறிவேப்பில்லை - சிறிது
செய்முறை -
  1. ஒரு பாத்திரத்தில் பாசிப் பருப்பு மற்றும் அது மூழ்கும் அளவு தண்ணிர், பெருங்காயத் தூள் சேர்த்து 15 நிமிடங்கள் வேகவைத்து தனியாக எடுத்து வைக்கவும்.
  2. பின் ஒரு வாணலியில் 3 மேஜைக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பில்லை, வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
  3. பின் பச்சை மிளகாய் மற்றும் தக்காளி சேர்த்து நன்கு சுருள வதக்கவும்.
  4. பின்னர் 1 1/2 கப் தண்ணிர் சேர்த்து மிளகுத் தூள், சீரகத் தூள், மஞ்சள் தூள், வெந்தயத் தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.
  5. கடைசியாக வெந்த பருப்பை போட வேண்டும் .கொதித்து 2 நிமிடம்  ஆனதும் மல்லித்தழையைப் போட்டு இறக்கி விடவும்.

சௌசௌ கூட்டு / Chayote Kootu


பரிமாறும் அளவு - 3 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. சௌசௌ - 1 ( சிறியது )
  2. சாம்பார் பொடி  1/2 மேஜைக்கரண்டி
  3. கடலை பருப்பு - 50 கிராம்
  4. உப்பு - தேவையான அளவு                         
அரைக்க -                                                        
  1. தேங்காய் துருவல் - 4 மேஜைக்கரண்டி
  2. தக்காளி  1 ( சிறியது )
  3. சின்ன வெங்காயம் - 5                                         
தாளிக்க -
  1. எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
  2. கடுகு - 1 தேக்கரண்டி
  3. கறிவேப்பில்லை - சிறிது
  4. சின்ன வெங்காயம் - 3
செய்முறை -
  1. வெங்காயம், சௌசௌவை சிறிதாக வெட்டி கொள்ளவும். அரைக்க கொடுத்தவற்றை அரைத்துக் கொள்ளவும்.                                                                    
  2. குக்கரில் கடலைப்பருப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைக்கவும். முதல் விசில் வந்ததும் சிம்மில் வைத்து 5 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைக்கவும்.
  3. பின் ஒரு பாத்திரத்தில் சௌசௌவுடன் சிறிது உப்பு மற்றும் காய் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி 10 நிமிடங்கள் வேக வைக்கவும்.                        
  4. பின் வெந்த கடலைப்பருப்பை அதில் போட்டு சாம்பார் பொடியையும்  போட வேண்டும். 5 நிமிடங்கள் கழித்து அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விட்டு இறக்கவும்.            
  5. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். அதன் பின் கறிவேப்பில்லை, வெங்காயம் சேர்த்து தாளித்து சௌசௌ கூட்டில் சேர்க்கவும்.                  
குறிப்புகள் -
  1. சௌசௌக்கு பதிலாக வாழைக்காய், புடலங்காய் வைத்தும் செய்யலாம்.

Sunday, March 17, 2013

சிக்கன் சூப்

 

பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. சிக்கன் - 100 கிராம்
  2. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
  3. மல்லித் தூள் + சீரகத் தூள் - 1/2 மேஜைக்கரண்டி
  4. மிளகுத் தூள் - 1 மேஜைக்கரண்டி
  5. உப்பு - தேவையான அளவு
அரைக்க -
  1. தக்காளி - 1
  2. பெரிய வெங்காயம் - 1/4
  3. பூண்டு - 2 பல்
செய்முறை -
  1. சிக்கனை நன்றாக சுத்தம் செய்து மிகவும் சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். அரைக்க கொடுத்தவற்றை மிக்சியில் அரைத்து கொள்ளவும்.
  2. குக்கரில் அரைத்த விழுது, சிக்கன், மஞ்சள் தூள், மல்லித் தூள், சீரகத் தூள், மிளகுத் தூள், உப்பு மற்றும் 3 கப் தண்ணிர் சேர்த்து 5 விசில் வரும் வரை வேக விட்டு இறக்கவும். சிக்கன் சூப் ரெடி. 
  3. பின்னர் பரிமாறும் போது தேவைகேற்ப உப்பு மற்றும் மிளகுத் தூள் தூவி பரிமாறவும்.



இனிப்பு அவல் புட்டு

பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. அவல் - 1 கப்
  2. சீனி - 10 மேஜைக்கரண்டி
  3. தண்ணீர் -1 1/2 கப்
  4. தேங்காய் துருவல் - 3/4 கப்  (75 கிராம் )
  5. உப்பு - 1/4 தேக்கரண்டி
செய்முறை -
  1. அடுப்பில் கடாயை வைத்து அவலை பொன்னிறமாக வறுத்து கொள்ளவும். சிம்மில் வைத்து வறுக்கவும். ஆறிய பின் மிக்ஸ்சியில் பொடித்துக் கொள்ள வேண்டும்.
  2. தண்ணீரை ஒரு பாத்திரத்தில் சுட வைக்கவும். பின் அடுப்பை அணைத்து விட்டு சுடு தண்ணீரை அவலோடு  சேர்த்து நன்கு கிளற வேண்டும். அதனோடு தேங்காய் துருவலையும் போட்டு கிளறவும்.
  3. அதன் பிறகு இந்த கலவையை இட்லி தட்டில் அல்லது புட்டு குழலில் வைத்து 10 நிமிடங்கள் வரை வேக வைக்கவும். .
  4. வெந்ததும் ஒரு பாத்திரத்தில் அவல் புட்டு மற்றும் சீனியைப் போட்டு கிளறவும். சுவையான அவல் புட்டு ரெடி.

Saturday, March 16, 2013

ஈசி பெப்பர் சிக்கன்

 

பரிமாறும் அளவு - 3 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. எலும்பில்லா சிக்கன் - 300 கிராம்
  2. பெரிய வெங்காயம் - 1/2
  3. மல்லித் தூள் - 1 மேஜைக்கரண்டி
  4. சீரகத் தூள் - 1 மேஜைக்கரண்டி
  5. மிளகுத் தூள் - 2 மேஜைக்கரண்டி
  6. உப்பு - தேவையான அளவு
தாளிக்க -
  1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
  2. கடுகு - 1/2 மேஜைக்கரண்டி
  3. கறிவேப்பில்லை - சிறிது
செய்முறை -
  1. சிக்கனை மஞ்சள் தூள் போட்டு நன்றாக கழுவி மிகவும் சிறிய துண்டுகளாக நறிக்கி கொள்ளவும். வெங்காயத்தை நீளமாக நறிக்கி கொள்ளவும்.
  2. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பில்லை போட்டு தாளிக்கவும். பின் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
  3. பின்னர் மல்லித் தூள், சீரகத் தூள், 1 மேஜைக்கரண்டி மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து 1 நிமிடம் கிளறவும்.
  4. இப்பொது சிக்கனை சேர்த்து நன்றாக கிளறி கடாயை மூடி வைக்கவும். தீயை குறைத்து வைத்து 15 நிமிடம் அல்லது சிக்கன் வேகும் வரை கொதிக்க விட வேண்டும். நடுவே கிளறி விடவும். சிக்கன் தண்ணீர் விடுவதால் தனியாக தண்ணீர் சேர்க்க தேவையில்லை.
  5. சிக்கன் நன்றாக வெந்ததும் மீதமுள்ள மிளகுத் தூளை சேர்த்து கிளறி இறக்கவும்.இதை பிரியாணி, ப்ரைட் ரைஸ் அல்லது சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடலாம்.
குறிப்புகள் -
  1. காரத்திற்கு மிளகுத் தூள் மட்டுமே சேர்ப்பதால் குழந்தைகளும் சாப்பிடலாம்.
  2.  நன்றாக காரம் சாப்பிடுவோர்கள் பச்சை மிளகாய் ஒன்றை சேர்த்து கொள்ளலாம்.

Friday, March 15, 2013

ரவை உப்புமா


பரிமாறும் அளவு - 2 நபருக்கு                                                                        

தேவையான பொருள்கள் -
  1. ரவை - 1 கப்
  2. தண்ணீர் - 1 1/2 கப்
  3. உப்பு - தேவையான அளவு
தாளிக்க -
  1. கடுகு - சிறிது
  2. கடலைப் பருப்பு - 1 மேஜைக்கரண்டி
  3. பெரிய வெங்காயம் -1
  4. பச்சை மிளகாய் - 2
  5. இஞ்சி - 1/2 இன்ச் (துருவியது)
  6. கறிவேப்பிலை - 2 ஆர்க்குகள்
  7. எண்ணெய் - 4 மேஜைக்கரண்டி                               
செய்முறை -
  1. அடுப்பில் கடாயை வைத்து ரவையை பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து வைத்து கொள்ளவும். சிம்மில் வைத்து வறுக்கவும்.
  2. அதே கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். பின் கடலை பருப்பு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், இஞ்சி ஒவ்வொன்றாக போட்டு தாளித்து வெங்காயத்தை போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.                            
  3. பின் அதில் 1 1/2 கப் தண்ணீர் ஊற்ற வேண்டும். உப்பை சேர்க்கவும். தண்ணீர் கொதித்தவுடன் ரவையை போட்டு கை விடாமல் கிளற வேண்டும். 10 நிமிடம் வரை கிளறியவுடன் ரவை  நன்கு வெந்த பின் இறக்கி விடவும். ரவை உப்புமா ரெடி.                               

தேங்காய் சட்னி

 

பரிமாறும் அளவு - 2 நபருக்கு

அரைக்க -
  1. தேங்காய் துருவல் - ஒரு சிறிய கப் (100 கிராம் )
  2. பச்சை மிளகாய் - 2
  3. பொட்டுக்கடலை - 3 மேஜைக்கரண்டி
  4. உப்பு  - தேவையான அளவு
தாளிக்க -
  1.  நல்லெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
  2. கடுகு - 1/2 மேஜைக்கரண்டி
  3. சின்ன வெங்காயம் - 4 (அரிந்தது )
  4. கறிவேப்பிலை - சிறிது
செய்முறை -
  1. அரைக்க கொடுத்த பொருள்கள் அனைத்தையும் ஒன்றாக மிக்சியில் சிறிது தண்ணிர் சேர்த்து அரைக்கவும்.
  2. அரைத்த விழுதை பாத்திரத்தில் ஊற்றி தேவையான தண்ணீர் மற்றும் உப்பு சேர்க்கவும்.
  3. அடுப்பில் கடாயை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும்.கடுகு வெடித்ததும் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து தாளிக்கவும். தாளித்தவற்றை சட்னியில் ஊற்றவும். தேங்காய் சட்னி ரெடி. இது  இட்லி, தோசை,பொங்கலோடு சாப்பிட நன்றாக இருக்கும.

காணத் துவையல் / Kaana Thuvaiyal / Horse Gram Thuvaiyal


பரிமாறும் அளவு - 3 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. காணம் - 1/2 கப் ( வறுத்தது )
  2. தேங்காய்த் துருவல் - 4 மேஜைக்கரண்டி
  3. புளி - 1 பாக்கு அளவு
  4. பூண்டு - 2 பல்
  5. பச்சை மிளகாய் - 2
  6. உப்பு - தேவையான அளவு
  7. கறிவேப்பிலை - 1ஆர்க்கு                         
செய்முறை -
  1.  மேலே கொடுத்த பொருள்கள் அனைத்தும் ஒன்றாக சேர்த்து மிக்சியில் அரைக்கவும். தேவைகேற்ப தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். காணத் துவையல் ரெடி. ரசம்/தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.

Thursday, March 14, 2013

பூண்டு குழம்பு


பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. பூண்டு -1 (15 பற்கள் )
  2. மிளகாய்த்தூள் - 1/4 மேஜைக்கரண்டி
  3. மல்லித்தூள் -  2 மேஜைக்கரண்டி
  4. சீரகத்தூள் - 1/2 மேஜைக்கரண்டி
  5. மிளகு தூள் - 1/2 மேஜைக்கரண்டி
  6. மஞ்சள் தூள் - 1/2தேக்கரண்டி
  7. புளி - கோலி அளவு
  8. உப்பு - தேவையான அளவு                           
அரைக்க -
  1. தேங்காய் துருவல் - 4 மேஜைக்கரண்டி
  2. சின்ன வெங்காயம் - 4
தாளிக்க -
  1. நல்லெண்ணெய் -  3 மேஜைக்கரண்டி
  2. கடுகு - 1/2 மேஜைக்கரண்டி
  3. சின்ன வெங்காயம் - 4
  4. வெந்தயம் - 1/2 மேஜைக்கரண்டி
  5. கறிவேப்பிலை - சிறிது
செய்முறை -
  1. புளியை 1 1/2 கப் தண்ணீரில் ஊற வைத்து கரைத்து கொள்ளவும். அரைக்க கொடுத்தவற்றை அரைத்து கொள்ளவும்.
  2. முதலில் அடுப்பில் கடாயை வைத்து நல்லெண்ணெய் 1 மேஜைக்கரண்டி ஊற்றி பூண்டை நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். தீயை சிம்மில் வைத்து செய்யவும்.                
  3. வதக்கிய பூண்டை தனியாக வைத்து விட்டு அதே கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, வெங்காயம், வெந்தயம், கறிவேப்பிலை  போட்டு  தாளிக்கவும்.
  4. பின்னர் புளி தண்ணீரை ஊற்றி மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள்,மிளகு தூள், மஞ்சள் தூள், உப்பு, பூண்டு போட்டு 10 நிமிடங்கள் அல்லது பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.
  5. பின்னர் அரைத்த விழுதை சேர்த்து 5-10 நிமிடங்கள் வரை கொதிக்க விட்டு இறக்கவும். சுவையான பூண்டு குழம்பு ரெடி.
குறிப்புகள் -
  1. மிளகாய் வத்தல், மல்லிசீரகம்,மிளகு எல்லாவற்றையும் நன்கு வறுத்து அரைத்தும் வைக்கலாம்.

சிக்கன் ப்ரைட் ரைஸ்

பரிமாறும் அளவு - 3 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. பாஸ்மதி அரிசி - 2 கப்
  2. சிக்கன் - 200 கிராம்
  3. பீன்ஸ், காரட், கோஸ், காப்சிகம் - 1 கப்
  4. பூண்டு - 3
  5. சோயா சாஸ் - 1 மேஜைக்கரண்டி
  6. சில்லி சாஸ் - 1 மேஜைக்கரண்டி
  7. மிளகு தூள் - 1 மேஜைக்கரண்டி
  8. முட்டை - 2
  9. ஸ்ப்ரிங் ஆனியன் - சிறிது
  10. உப்பு - தேவையான அளவு
  11. எண்ணெய் -  5 மேஜைக்கரண்டி 
செய்முறை -
  1. சிக்கனை சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும். காய்களை நீளமாக வெட்டி கொள்ளவும். பூண்டை துருவி கொள்ளவும்.
  2. அரிசியில் தண்ணீர், உப்பு சேர்த்து முக்கால் பாகம் வேக வைக்கவும். பின்னர் தண்ணீரை வடித்து சாதத்தில் ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி கிளறி ஆற வைக்கவும். சாதம் உதிரியாக இருக்க வேண்டும்.
  3. கடாயை அடுப்பில் வைத்து சிறிது 2 மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் சிக்கனை போட்டு நன்கு வேகும் வரை ப்ரை செய்து தனியாக எடுத்து வைக்கவும்.
  4. கடாயை கழுவி விட்டு மீண்டும் அடுப்பில் வைத்து 1 மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் முட்டையை உடைத்து ஊற்றி கொஞ்சம் உப்பு சேர்த்து கிளறவும். வெந்தவுடன் தனியாக எடுத்து வைக்கவும்.
  5. வாயகன்ற கடாயில் 2 மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் பூண்டை போட்டு வதக்கவும். அதன் பின் காய்களை போட்டு உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
  6. சாதத்தை சேர்த்து நன்றாக கிளறவும். பிறகு சோயா சாஸ், சில்லி சாஸ், மிளகு தூள் சேர்த்து நன்றாக கிளறி ஸ்ப்ரிங் ஆனியன் சேர்த்து இறக்கவும்.
குறிப்புகள் -
  1. அஜினமோடோ உப்பு கொஞ்சம் சேர்த்து கொண்டால் சுவையாக இருக்கும்.
  2. சாதம் மிச்சமானால் அதை ப்ரைட் ரைஸ் செய்ய உபயோகிக்கலாம்.
  3. காய்கள் முக்கால் பாகம் வெந்தால் போதுமானது.



சிக்கன் பிரியாணி

பரிமாறும் அளவு - 3 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. பாஸ்மதி அல்லது சீரக சம்பா அரிசி - 2 கப்
  2. பெரிய வெங்காயம் - 1
  3. தக்காளி - 1
  4. சிக்கன் - 250 கிராம்
  5. கொத்தமல்லி தழை மற்றும் புதினா - 1/2 கப்
  6. மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி
  7. சீரகத் தூள் - 1 மேஜைக்கரண்டி
  8. மல்லித் தூள் - 1 மேஜைக்கரண்டி
  9. கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி
  10. தயிர் - 2 மேஜைகரண்டி
  11. எலும்பிச்சை சாறு - 1 மேஜைக்கரண்டி
  12. தண்ணீர் - 3 3/4 கப்
  13. உப்பு - தேவையான அளவு
அரைக்க -
  1. இஞ்சி(துருவியது) - 2 மேஜைக்கரண்டி
  2. பூண்டு(துருவியது) - 2 மேஜைக்கரண்டி
  3. பச்சை மிளகாய் - 3 அல்லது 4
  4. பட்டை - 2
  5. கிராம்பு - 2
  6. சோம்பு - 1 மேஜைக்கரண்டி
தாளிக்க -
  1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
  2. நெய் - 3 மேஜைக்கரண்டி
  3. பட்டை - 2
  4. கிராம்பு - 2
  5. பிரிஞ்சி இலை - 2
  6. ஏலக்காய் - 2
  7. சோம்பு - 1 மேஜைக்கரண்டி
செய்முறை -
  1. அரிசியை கழுவி 30 நிமிடம் ஊற வைத்து கொள்ளவும்.
  2. அரைக்க கொடுத்தவற்றை நன்கு அரைத்து கொள்ளவும்.
  3. வெங்காயம், தக்காளியை நீளமாக நறுக்கி கொள்ளவும். சிக்கனை நன்றாக கழுவி சிறியதாக வெட்டி கொள்ளவும். கொத்தமல்லி தழை, புதினாவை சிறியதாக வெட்டி கொள்ளவும்.
  4. ஒரு அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை, ஏலக்காய் மற்றும் சோம்பு போட்டு தாளிக்கவும்.
  5. பின்னர் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். வதங்கியவுடன் அரைத்த கலவையை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். பின் தக்காளியை சேர்த்து சுருள வதக்கவும்.
  6. அதன் பின் சிக்கன், உப்பு, மஞ்சள் பொடி, சீரகத் தூள், மல்லித் தூள், கரம் மசாலா தூள் போட்டு கிளறி விடவும்.
  7. கொத்தமல்லி தழை, புதினா, தயிர் மற்றும் எலும்பிச்சை சாரை சேர்த்து சிக்கன் பாதி வேகும் வரை கிளறி விடவும்.
  8. சிக்கன் பாதி வெந்ததும் அதனுடன் 3 3/4 கப் தண்ணீரை சேர்த்து கொதி வந்தவுடன் அரிசியை போட்டு கிளறி விட்டு பாத்திரத்தை மூடி விடவும். தீயை குறைத்து கொள்ளவும்.
  9. 10 - 15 நிமிடம் வரை கொதித்து தண்ணீர் வற்றியவுடன் அடுப்பை அணைக்கவும். அடி பிடிக்காமல் இருக்க நடுவில் ஓரிரு முறை மெதுவாக கிளறி விடவும்.
  10. அடுப்பில் இருந்து இறக்கிய பின்னர் ஒரு 15 நிமிடம் கழித்து மூடியை திறந்து மெதுவாக கிளறி விடவும். கொத்தமல்லி தழையைத் தூவி பரிமாறலாம்.
குறிப்புகள் -
  1. சிக்கனை மசாலா பொடிகள், தயிர், எலுமிச்சை சாருடன் 30 நிமிடம் ஊற வைத்தும் சேர்க்கலாம்.
  2. பிரஷர் குக்கரில் செய்தால் 2 அல்லது 3 விசில் வந்தவுடன் இறக்கி விடவும்.
  3. காரமாக விரும்பினால் 1 தேக்கரண்டி மிளகாய் தூளை சேர்த்து செய்யலாம்.

முட்டை குழம்பு


பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. முட்டை - 2
  2. தக்காளி - 1
  3. மிளகாய்த்தூள் - 1/4 மேஜைக்கரண்டி
  4. மல்லித்தூள் -  2 மேஜைக்கரண்டி
  5. மிளகு தூள் - 1/2 மேஜைக்கரண்டி
  6. சீரகத்தூள் - 1/2 மேஜைக்கரண்டி
  7. மஞ்சள் தூள் - 1/2தேக்கரண்டி
  8. இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 மேஜைக்கரண்டி
  9. மல்லித்  தழை  - சிறிது
  10. உப்பு - தேவையான அளவு
அரைக்க -
  1. தேங்காய் துருவல் - 8 மேஜைக்கரண்டி
  2. சின்ன வெங்காயம் - 8
தாளிக்க -
  1. கடுகு - 1 தேக்கரண்டி
  2. கறிவேப்பில்லை - சிறிது
  3. நல்எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
  4. தேங்காய் எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
  5. சின்ன வெங்காயம் - 5
செய்முறை -
  1. வெங்காயம், தக்காளியை நீளமாக நறுக்கி கொள்ளவும்.  அரைக்க கொடுத்தவற்றை அரைத்து கொள்ளவும்.
  2. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பில்லை போட்டு தாளித்து பின் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
  3. வதங்கியவுடன் தக்காளியை போட்டு நன்கு சுருள வதக்கவும். பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
  4. வதக்கியதும் மிளகாய்த்தூள், மல்லிதூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு போட்டு 2 நிமிடம்  கிளறவும்.
  5. அதன்பின் 1 1/2கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட வேண்டும். 5 நிமிடங்கள் கழித்து முட்டையை உடைத்து ஊற்றி அதன் மேல் 1 மேஜைக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்ற வேண்டும்.
  6. அடுப்பை சிம்மில் 5 நிமிடம் வைக்க வேண்டும்.
  7. பின் லேசாக முட்டையை பிரட்டி விட வேண்டும். பின் 5 நிமிடங்கள் கழித்து மிளகு  சீரகப்பொடியை போட வேண்டும்.
  8. கடைசியாக அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விட்டு மல்லித்தழை  தூவி  இறக்கவும். சுவையான  முட்டைகுழம்பு ரெடி.

Tuesday, March 12, 2013

தக்காளி சட்னி

 

பரிமாறும் அளவு - 4

தேவையான பொருள்கள் -
  1. தக்காளி -1 கப்
  2. வெங்காயம் - 1கப்
  3. மிளகாய் வத்தல் - 2
  4. பூண்டு பற்கள் - 4
  5. தேங்காய் துருவல் - 6 மேஜைக்கரண்டி
  6. உப்பு - தேவையான அளவு
தாளிக்க -
  1. கடுகு - 1 தேக்கரண்டி
  2. உளுந்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
  3. கறிவேப்பில்லை - சிறிது
  4. எண்ணெய் - 3 தேக்கரண்டி
செய்முறை -
  1. அடுப்பில் கடாயை வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி தனியாக எடுத்து ஆற வைக்கவும்.
  2. அதே கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் தக்காளியை நன்கு சுருள வதக்கி தனியாக எடுத்து ஆற வைக்கவும்.
  3. ஆறியதும் வதக்கிய வெங்காயம், தக்காளி, வத்தல், பூண்டு, தேங்காய் உப்பு சேர்த்து மிக்சியில் அரைக்கவும்.
  4. பின் கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பில்லை போட்டு தாளித்து அரைத்தைவையுடன் சேர்க்கவும். சட்னி ரெடி. இதை தோசை/ இட்லி/ சப்பாத்தியுடன் சாப்பிடலாம்.
குறிப்புகள் -
  1. பெரிய வெங்காயத்துக்கு பதிலாக சின்ன வெங்காயம் சேர்த்து செய்தால் இன்னும் சுவையாக இருக்கும்.

Monday, March 11, 2013

அடை


பரிமாறும் அளவு - 4

தேவையான பொருட்கள் -
  1. பச்சரசி - 2கப்
  2. புழுங்கலரிசி - 2கப்
  3. கடலைபருப்பு - 1கப்
  4. துவரம்பருப்பு - 1கப்
  5. உளுந்தம்பருப்பு - 1/4கப்
  6.  மிளகாய் வத்தல் - 5
  7. பெருங்காயம் - சிறிது
  8. வெங்காயம் - 1
  9. உப்பு - தேவையான அளவு
  10. கறிவேப்பில்லை - சிறிது
செய்முறை -
  1. அரிசியை  தனியாகவும்  பருப்பை  தனியாகவும் 4 மணி நேரம்  ஊற வைக்கவும்.
  2. பிறகு அரிசி, மிளகாய் வத்தல், உப்பு மற்றும் பெருங்காயம் அனைத்தையும் நன்றாக கிரைண்டரில் அரைக்கவும்.
  3. பருப்பு மற்றும் வெங்காயத்தை கர கரவென்று அரைக்கவும்.
  4. இரண்டு கலவையும் ஒன்று சேர்த்து கறிவேப்பில்லையை அதனுடன் சேர்க்கவும். 
  5. பின் தோசைக் கல்லை போட்டு அடை மாவை ஊத்தி சுட்டு எடுக்கவும்.
  6. சுவையான அடை தயார். இதை தேங்காய் சட்னி/ அவியல்/ சாம்பாருடன் சாப்பிடலாம்.
குறிப்புகள் -
  1. வெங்காயத்தை அரைக்காமல் சிறிதாக வெட்டி அப்படியே அரைத்த மாவில் சேர்த்தும் அடை சுடலாம்.

வெண்டைக்காய் பச்சடி



பரிமாறும் அளவு - 4 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. வெண்டைக்காய் - 100 கிராம்
  2. உப்பு - தேவையான அளவு                                    
அரைக்க -
  1. தேங்காய் துருவல் - 5 மேஜைக்கரண்டி
  2. தக்காளி -1
  3. பச்சை மிளகாய் - 2 (அல்லது மிளகாய் வத்தல் -2)
  4. சீரகம் - 2 மேஜைக்கரண்டி
  5. சின்ன வெங்காயம்  - 3                                  
தாளிக்க -
  1. கடுகு - 1 தேக்கரண்டி
  2. சின்ன வெங்காயம் - 3
  3. எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
  4. கறிவேப்பில்லை - சிறிது
செய்முறை -
  1. வெண்டைக்காய் மற்றும் சின்ன வெங்காயத்தை சிறிதாக நறிக்கி கொள்ளவும்.
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்  கடுகு, வெங்காயம், கறிவேப்பில்லை போட்டு வதக்கி  வெண்டைக்காய் மற்றும் உப்பு சேர்த்து வெண்டைக்காய் வேகும்  வரை வதக்கவும்.          
  3. பின்னர்  அரைத்த  விழுதை சேர்த்து 1கப் தண்ணீர்  ஊற்றி கொதிக்க விடவும்.                
  4. தண்ணீர் வற்றியவுடன் இறக்கவும். வெண்டைக்காய்  பச்சடி ரெடி.
Related Posts Plugin for WordPress, Blogger...