Wednesday, May 27, 2015

மாங்காய் சாதம் / Mango Rice


பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. வேக வைத்த சாதம்  - ஒரு கப்
  2. நடுத்தர மாங்காய் - 1
  3. மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி 
  4. வெந்தயத்தூள் - 1 தேக்கரண்டி 
  5. மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி 
  6. காயத்தூள் - 1/2 தேக்கரண்டி 
  7. உப்பு - தேவையான அளவு 
தாளிக்க -
  1. நல்லெண்ணெய் - 4 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1/2 தேக்கரண்டி 
  3. உளுந்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி 
  4. கடலைப்பருப்பு - 2 தேக்கரண்டி 
  5. கறிவேப்பிலை - சிறிது 
செய்முறை -
  1. மாங்காயை நன்கு கழுவி தோல் சீவி துருவியில் வைத்து துருவிக் கொள்ளவும். 
                                                                          
  2. ஒரு கப் சாதத்திற்கு 3/4 கப் மாங்காய் துருவல் தேவைப்படும். புளிப்பு தன்மையை பார்த்து அவரவர் விருப்பத்திற்கு தக்கபடி கூட்டி அல்லது குறைத்து கொள்ளலாம்.
  3. வேக வைத்த சாதத்தை சிறிது நேரம் ஆற விடவும்.
                                                                                 
  4. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் உளுந்தம் பருப்பு, கடலைப் பருப்பு போடவும்.
  5. கடலைப்பருப்பு பொன்னிறமானதும் கறிவேப்பிலை சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து மிளகாய் தூள், மஞ்சள்தூள், காயத்தூள், வெந்தயத்தூள், 1/2 தேக்கரண்டி உப்பு சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும். சாதத்தில் உப்பு இருப்பதால் 1/2 தேக்கரண்டி உப்பு போதுமானது.                           
  6. பிறகு துருவி வைத்துள்ள மாங்காய் துருவலை எடுத்து பொடி வகைகளோடு சேர்த்து மாங்காய் முக்கால் பாகம் வேகும் வரை நன்கு கிளறவும். நன்கு வெந்து விட்டால் குழைந்து விடும்.                                                                                                                     
  7. மாங்காய் துருவல் முக்கால் பாகம் வெந்ததும் எடுத்து ஆற வைத்திருக்கும் சாதத்தில் கலந்து எல்லா இடங்களிலும் படுமாறு ஒரு கரண்டியால் கலந்து விடவும். சுவையான மாங்காய் சாதம் ரெடி.                                                                                                          
  8. மாங்காய் சாதத்துடன் துவையல், அப்பளம் சேர்த்து சாப்பிட்டால் நல்ல சுவையாக இருக்கும்.

Friday, May 22, 2015

திருநெல்வேலி (கோதுமை) அல்வா / Tirunelveli (Wheat) Halwa

தேவையான பொருட்கள் -
  1. கோதுமை - 1 கப்
  2. ப்ரவுண்  சுகர் (அல்லது ஒயிட் சுகர்) - 3 கப்
  3. முந்திரி பருப்பு - சிறிது
  4. நெய் - 1 1/2 கப்
செய்முறை -
  1. ஒரு கப் கோதுமையை எடுத்து முதல் நாள் இரவே தண்ணீரில் ஊற வைக்கவும்.
  2. 6 - 8 மணி நேரம் நன்றாக ஊற வேண்டும். பிறகு அதை மிக்சியில் அரைத்து பால் எடுக்க வேண்டும்.
  3. மிக்சியில் ஊறிய கோதுமை மற்றும் 1 கப் தண்ணீர் ஊற்றி நன்றாக அரைக்கவும். பிறகு அரைத்ததை சல்லடையில் வடிகட்டவும்.
  4. மறுபடி மிக்சியில் கோதுமை மற்றும் 1 கப் தண்ணீர் சேர்த்து அரைத்து பாலை அதே பாத்திரத்தில் வடிகட்டவும்.
  5. கோதுமை பாலை 3 - 4 மணி நேரம் அசைக்காமல் மூடி வைக்கவும். பிறகு பார்த்தால் மேலே தெளிந்த நீரும் கீழே கொஞ்சம் கட்டியான கோதுமை பாலும் இருக்கும்.
  6. ஒரு கரண்டியால் மேலே உள்ள தெளிந்த நீரை மெதுவாக எடுத்து விடவும்.
  7. நெய்யை உருக்கி கொள்ளவும். முந்திரி பருப்பை ஒரு மேஜைக்கரண்டி நெய்யில் வறுத்து எடுத்து கொள்ளவும். தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  8. ஒரு நான்-ஸ்டிக் கடாயில் கோதுமை பாலை ஊற்றவும். அதனுடன் 3 கப் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். இப்பொது அடுப்பை ஆன் செய்து கடாயை வைக்கவும். மிதமான தீயில் வைக்கவும்.
  9. இப்போது  இருந்தே கிளற ஆரம்பிக்கவும். சூடானதும் அடியில் கட்டி போல் உருவாகும். கிளற கிளற எல்லாம் ஒன்றாக வரும்.
  10. பால் கெட்டியானதும் சக்கரையை சேர்க்கவும். கை விடாமல் கிளறி கொண்டே இருக்கவும். நான் ப்ரவுன் சுகர் சேர்த்திருப்பதால் தானாகவே அல்வா கலர் மாறி விடும்.
  11. ஒயிட் சுகர் சேர்ப்பதாக இருந்தால் தானாக பிரவுன் கலர் வராது. கலர் வருவதற்கு கீழே உள்ள குறிப்பை பார்க்கவும். 
  12. கை விடாமல் கிளறி கொண்டே இருந்தால் கொஞ்சம் கொஞ்சமா அல்வா கெட்டியாக ஆரம்பிக்கும். இப்போது உருக்கிய நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளறவும். மொத்தமாக நெய்யை சேர்க்காமல் கடாயில் அல்வா ஒட்டும் போதும் மட்டும் கொஞ்சம் நெய்யை சேர்த்துக் கிளறி கொண்டே இருக்கவும். வறுத்த முந்திரியை சேர்த்து கொள்ளவும்.
  13. கடைசியாக நெய் அல்வாவிலிருந்து வெளியே வர ஆரம்பிக்கும். கரண்டியில் ஒட்டாமல் அல்வா கீழே விழும். அது தான் சரியான பதம். அடுப்பில் கோதுமை பாலை வைத்ததிலிருந்து இந்த பதம் வருவதற்கு கிட்டதட்ட ஒரு மணி நேரம் ஆகும்.
  14. அடுப்பை அணைக்கவும். சுவையான அல்வா ரெடி. ரெடியான அல்வாவை ஒரு நெய் தடவிய ட்ரேயில் போட்டு ஆறியதும் கட் செய்து பரிமாறலாம் அல்லது அப்படியே பரிமாறலாம்.
குறிப்புகள் -
  1. 250 கிராம் கோதுமைக்கு அரை கிலோவுக்கு கொஞ்சம் கூடுதலாகவே அல்வா வரும்.
  2. ஒயிட் சுகர் சேர்த்து செய்யும் போது  அல்வாவுக்கு கலர் கிடைப்பதற்க்கு கொஞ்சம் ஆரஞ்சு புட் கலர் சேர்த்துக் கொள்ளவும். 
  3. புட் கலர் சேர்க்க விரும்பாதவர்கள் சுகரை கேரமல் (caramel) செய்து சேர்த்து கொண்டால் பிரவுன் கலரில் அல்வா வரும். கேரமல் செய்வதற்கு ஒரு கடாயில் அரை கப் சக்கரை மற்றும் 1/4 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். தீய்ந்து விடாமல் பார்த்துக் கொள்ளவும். சிறிது நேரம் கழித்து சக்கரை பாகு பிரவுண் கலராக மாறும். அடுப்பை உடனே அணைத்து விடவும். கேரமல் ரெடி. இதை அல்வா கிண்டும் போது மற்றொரு அடுப்பில் செய்து கொள்ளவும். முந்திரி பருப்பு சேர்க்கும் பொது இதையும் சேர்த்து விடுங்கள். பிரவுண்  கலர் அல்வா ரெடி. 
  4. ப்ரிஜ்ஜில் வைத்து 2 -3 வாரம் வைத்து சாப்பிடலாம். அவ்வாறு சாப்பிடும் பொது தேவையான அல்வாவை எடுத்து ஒரு கடாயில் போட்டு கிளறி சூடுபடுத்தி பரிமாறவும். மைக்ரோவேவ் ஓவனில் சூடுபடுத்தி சாப்பிடுவதை விட அடுப்பில் சூடுபடுத்தி சாப்பிட்டால் சுவையாக இருக்கும். 

Thursday, May 21, 2015

மட்டன் தொக்கு / Mutton Thokku


பரிமாறும் அளவு - 2 நபருக்கு 

தேவையான பொருட்கள் -
  1. மட்டன் - 1/4 கிலோ 
  2. கொத்தமல்லி பொடி - 1 மேஜைக்கரண்டி 
  3. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
  4. சீரக பொடி - 1 மேஜைக்கரண்டி
  5. சோம்பு பொடி - 1 மேஜைக்கரண்டி
  6. மிளகாய் பொடி - 1 தேக்கரண்டி
  7. தயிர் - 2 மேஜைக்கரண்டி
  8. இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜைக்கரண்டி
  9. உப்பு - தேவையான அளவு 
  10. கொத்தமல்லி தழை - சிறிது 
தாளிக்க -
  1. பட்டை - 1
  2. கிராம்பு - 2
  3. வெங்காயம் - 1
  4. பச்சை மிளகாய் - 2
  5. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
செய்முறை -
  1. மட்டன், மஞ்சள்தூள், தயிர், தேவையான அளவு உப்பு சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. வெங்காயத்தை பொடிதாக நறுக்கி கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும்.
  3. அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு போடவும். பட்டை பொன்னிறமானதும் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  4. வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பிறகு  மிளகாய் பொடி, கொத்தமல்லி பொடி, சீரகப் பொடி, சோம்பு பொடி சேர்த்து கிளறவும். 
  5. அதனுடன் ஊற வைத்த மட்டனை சேர்த்து 5 - 10 நிமிடம் நன்றாக கிளறவும். மட்டனில் இருந்து தண்ணீர் வரும். அதனால் தண்ணிர் சேர்க்க தேவை இல்லை. உப்பு சரி பார்த்து தேவையான அளவு சேர்த்துக் கொள்ளவும்.
  6. பிறகு குக்கரை மூடி வெயிட்  வைக்கவும். முதல் விசில் வந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து 20-25 நிமிடங்கள் அல்லது மட்டன் வேகும் வரை வைத்து அடுப்பை அணைக்கவும்.
  7. நீராவி அடங்கியதும் மூடியை திறக்கவும். மட்டனில் தண்ணீர் அதிகமாக இருந்தால் தண்ணீர் வற்றும் வரை குக்கர் மூடி போடாமல் கொதிக்க வைக்கவும்.
  8. தண்ணீர் வற்றியதும் மல்லித்தழை தூவி அடுப்பை அணைக்கவும். சுவையான மட்டன் தொக்கு ரெடி.
குறிப்பு -
  1. சோம்பு பொடியை தவிர்க்க வேண்டாம். அது ஒரு நல்ல ருசியை மட்டனுக்கு குடுக்கும்.
  2. அவரவர் காரத்திற்கு ஏற்ப பச்சை மிளகாய், மிளகாய் தூளை கூட்டி அல்லது குறைத்துக் கொள்ளவும்.

Monday, May 18, 2015

வெங்காய வடகம் / Onion Vadagam

இப்போது கொளுத்தும் வெயில் ஆரம்பம் ஆகி விட்டது. வெங்காய வடகம் செய்வதற்கு ஏற்ற காலம். ஒரு வருடத்திற்கு தேவையான வடகம் செய்து வெயிலில் காய வைத்து எடுத்து வைத்துக் கொள்ளலாம். இனி சின்ன வெங்காயத்தை வைத்து வடகம் எப்படி செய்வதென்று பார்ப்போமா !

தேவையான பொருள்கள் -
  1. சின்ன வெங்காயம் - 2 கிலோ 
  2. வெள்ளை முழு உளுந்து - 200 கிராம் 
  3. காயப்பொடி - 1 தேக்கரண்டி 
  4. கடுகு - 1 மேஜைக்கரண்டி  
  5. மஞ்சள் பொடி - 1 தேக்கரண்டி
  6. வெந்தயப்பொடி - 2 தேக்கரண்டி 
  7. உப்பு - தேவையான அளவு 
  8. மல்லித்தழை - 1 கட்டு 
  9. கறிவேப்பிலை - ஒரு சிறிய கப் அளவு 
கரகரப்பாக அரைக்க -
  1. மிளகாய் வத்தல் - 10
  2. சீரகம் - 2 மேஜைக்கரண்டி 
  3. பூண்டு - 1 பெரியது 

செய்முறை -
  1. 2 கிலோ வெங்காயத்தை தோலுரித்து பொடிதாக நறுக்கி ஒரு பேப்பரில் பரப்பி நான்கு மணி நேரம் உலர விடவும்.                                                                     
  2. உளுந்தம் பருப்பை 2 மணி நேரம் ஊற வைக்கவும். 
  3. மல்லித்தழை, கறிவேப்பிலை இரண்டையும் பொடிதாக நறுக்கி வைக்கவும். பூண்டை தோலுரித்து வைக்கவும்.
  4. மிளகாய் வத்தல், சீரகம், பூண்டு மூன்றையும் மிக்ஸ்சியில் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.                                                                                                                                        
  5. பருப்பை நன்றாக  கழுவி தண்ணீரை வடித்து விட்டு அதனுடன் உப்பு சேர்த்து கிரைண்டரில் தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைத்து ஒரு வாயகன்ற பாத்திரத்தில் எடுத்து வைக்கவும். இட்லி பதத்திற்கு அரைக்க தேவை இல்லை. 10 நிமிடம் அரைத்தால் போதும்.                         
  6. பிறகு அதனுடன் நறுக்கிய வெங்காயம், கடுகு, காயப்பொடி, மஞ்சள்பொடி, வெந்தயப்பொடி, மல்லித்தழை, கறிவேப்பிலை எல்லாவற்றையும் சேர்த்து நன்கு பிசைந்து வைக்கவும்.                   
  7. பிறகு கையை தண்ணீரில் நனைத்துக் கொண்டு வெங்காய கலவையை உருட்டாமல் சிறிது சிறிதாக எடுத்து தட்டுகளில் வைத்து வெயிலில் காய வைக்கவும். உருட்டி வைத்தால் வறுக்கும் போது சரியாக வேகாது. 
                                                                                            
                                                                                                                          
  8. அடுத்த நாள் வடகம் தட்டோடு ஒட்டி இருக்கும். எனவே ஒரு சிறிய மேஜைக்கரண்டி கொண்டு எடுத்து ஒரு பேப்பரில் பரப்பி வெயிலில் காய வைக்கவும்.                                                   
  9. இரண்டு நாட்களில் வடகம் நன்கு காய்ந்து விடும்.                         
  10. பிறகு ஒரு காற்றுப்புகாத டப்பாவில் போட்டு மூடி வைக்கவும். தேவையான போது வறுத்து கொள்ளலாம்.
இனி வெங்காய வடகத்தை எப்படி வறுப்பது என்ற ஒரு சிறிய பதிவு -

தேவையான பொருள்கள் -
  1. வெங்காய வடகம் - 8
  2. பொரிப்பதற்கு எண்ணெய் - தேவையான அளவு 
செய்முறை -
  1. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து வடகங்களை போடவும். பிறகு திருப்பி போடவும்.                       

                  
  2. இரு புறமும் வெந்ததும் எடுத்து ஒரு டிஸ்யு பேப்பரில் வைக்கவும். எண்ணெய் உறிஞ்சியவுடன் எடுத்து சாப்பிடலாம்.                                                            

                                                                                                             
  3. சாம்பார் சாதம், தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். வடக குழம்பும் வைக்கலாம். வடகத் துவையலும் அரைக்கலாம்.

Thursday, May 14, 2015

வெங்காயம் தக்காளி தொக்கு / Onion Tomoto Thokku


பரிமாறும் அளவு - 3 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. பெரிய வெங்காயம் - 5
  2. தக்காளி - 1
  3. மிளகாய் தூள் - 1 மேஜைக்கரண்டி 
  4. மஞ்சள் தூள் - 1.2  தேக்கரண்டி 
  5. கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி 
  6. மல்லித்தழை - சிறிது 
  7. உப்பு - தேவையான அளவு                             
தாளிக்க -
  1. எண்ணெய் - 4 மேஜைக்கரண்டி                                                                               
செய்முறை -
  1. வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடிதாக நறுக்கி வைக்கவும். 
  2. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.                                            
  3. வெங்காயம் பொன்னிறமானதும் நறுக்கி வைத்துள்ள தக்காளி சேர்த்து வதக்கவும்.   
  4. தக்காளி சுருள வதங்கியதும் மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து 2 நிமிடம் எல்லா இடங்களிலும் படும் படி நன்கு கிளறி விடவும்.
                                                                                  
  5. இறுதியில் மல்லித்தழையை சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும்.    
  6. சுவையான வெங்காயம் தக்காளி தொக்கு ரெடி. சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.                                                           
Related Posts Plugin for WordPress, Blogger...