Tuesday, November 29, 2016

சாத வடகம் / Rice Vadam


தேவையான பொருள்கள் -
  1. வேக வைத்த சாதம் - 1 கப் 
  2. மிளகாய் வத்தல் - 2
  3. சீரகம் - 1 தேக்கரண்டி 
  4. காயத் தூள் - 1/2 தேக்கரண்டி 
  5. உப்பு - தேவையான அளவு 
செய்முறை -
  1. வேக வைத்த சாதத்துடன் மிளகாய் வத்தல், காயத் தூள், சீரகம், உப்பு சேர்த்து மிக்ஸி அல்லது கிரைண்டரில் அரைத்துக் கொள்ளவும். சாதத்தில் உப்பு இருப்பதால் தேவைக்கு ஏற்ப சேர்த்துக் கொள்ளவும்.
  2. தட்டில் லேசாக எண்ணெய் தடவி அதில் அரைத்து வைத்துள்ள சாதத்தை ஒரு மேஜைக்கரண்டி அளவு எடுத்து வட்ட வட்டமாக வைக்கவும்.
  3. பிறகு எல்லா தட்டுகளையும் மொட்டை மாடியில் அல்லது வெயில் வரும் இடத்தில் ஒரு நாள் முழுவதும் வைக்கவும். அடுத்த நாள் வடகத்தை ஒரு சிறிய கரண்டியால்  எடுத்து மாற்றி போட்டு மீண்டும் வெயிலில் காய வைக்கவும்.
  4.  இப்போது வடகங்கள் நன்கு காய்ந்து விடும். 
  5. காய்ந்த வடகங்களை ஒரு காற்றுப் புகாத பாட்டிலில் போட்டு வைக்கவும். தேவையான போது எடுத்து வறுத்துக் கொள்ளலாம்.
குறிப்பு -

  1. மீந்து போன சாதத்திலும் இதே முறையில் வடகம் செய்யலாம்.

Monday, November 21, 2016

உளுந்து சாதம் / Black urad dal Rice

கறுப்பு உளுந்து சாதம் எங்கள் ஊரில் மிகவும் பிரபலமானதாகும். உளுந்து சாதம் பெண் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. இந்த கறுப்பு உளுந்தை வைத்து உளுந்து சாதம் எப்படி செய்வதென்று பார்ப்போம் !

பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. அரிசி - 1 கப் 
  2. தோல் உளுந்து - 1/2 கப் 
  3. உப்பு - தேவையான அளவு 
அரைக்க -
  1. தேங்காய் துருவல் - 4 மேஜைக்கரண்டி 
  2. பூண்டு பற்கள் - 4
  3. சீரகம் - 1 தேக்கரண்டி 
செய்முறை -
  1. அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் அரிசி, தோல் உளுந்து இரண்டையும் போட்டு லேசாக வறுத்துக் கொள்ளவும்.
  2. தேங்காய் துருவல், பூண்டு பற்கள், சீரகம் மூன்றையும் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
  3. குக்கரில் அரிசி, தோல் உளுந்து, உப்பு, அரைத்த தேங்காய் கலவை, எல்லாவற்றையும் போட்டு அதோடு 3 கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து மூடி போட்டு மூடவும்.
  4. நீராவி வந்ததும் வெயிட் போட்டு 4 விசில் வரும் வரை வைத்திருந்து அடுப்பை அணைக்கவும். நீராவி அடங்கியதும் மூடியை திறந்து நன்றாக கிளறி விடவும். சுவையான உளுந்து சாதம் ரெடி.
  5. உளுந்து சாதத்துடன் அவியல், தக்காளி பச்சடி, எள்ளுத் துவையல் சேர்த்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.

Thursday, November 10, 2016

நெத்திலி மீன் குழம்பு / Nethili Fish Curry


பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள்-
  1. நெத்திலி மீன் - 1/4 கிலோ 
  2. தக்காளி - 1
  3. பச்சை மிளகாய் - 1
  4. மிளகாய் தூள் - 1 மேஜைக்கரண்டி 
  5. மல்லித் தூள் - 3 மேஜைக்கரண்டி 
  6. சீரகத் தூள் - 1 தேக்கரண்டி 
  7. இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 மேஜைக்கரண்டி 
  8. மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி 
  9. புளி - சிறிய எலுமிச்சை அளவு 
  10. மல்லித்தழை - சிறிது 
  11. உப்பு - தேவையான அளவு 
தேங்காய் பால் எடுக்க -
  1. தேங்காய் துருவல் - 1 கப்  
தாளிக்க -
  1. நல்லெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1/2 தேக்கரண்ட
  3. வெந்தயம் - 1/2 தேக்கரண்டி 
  4. சின்ன வெங்காயம் - 100 கிராம் 
  5. கறிவேப்பிலை - சிறிது 
செய்முறை -
  1. நெத்திலி மீனை நன்றாக கழுவி அதன் மேல் 1/2 மேஜைக்கரண்டி மிளகாய் தூள், சிறிது உப்பு சேர்த்து கலந்து 15 நிமிடம் வரை ஊற வைக்கவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும். வெங்காயம், தக்காளி, மல்லித்தழை மூன்றையும் பொடிதாக வெட்டி வைக்கவும்.
  2. புளியை ஒரு கப் தண்ணீரில் ஊற வைத்து கரைத்து வைத்துக் கொள்ளவும்.
  3. தேங்காய் துருவலை மிக்ஸ்சியில் அரைத்து ஒரு கப் அளவுக்கு பால் எடுத்துக் கொள்ளவும்.
  4. அடுப்பில் ஒரு வாயகன்ற பாத்திரத்தை வைத்து நல்லெண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடானதும் கடுகு  போடவும்.
  5. கடுகு வெடித்தவுடன் வெந்தயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  6. வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும். பச்சை வாடை போனதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
  7. தக்காளி நன்கு வதங்கியதும் அடுப்பை சிம்மில் வைத்து மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகத் தூள், மஞ்சள் தூள் சேர்த்து 1 நிமிடம் கிளறவும்.
  8. பிறகு கரைத்து வைத்துள்ள புளித் தண்ணீர், உப்பு சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து மசாலா வாடை போகும் வரை நன்கு கொதிக்க விடவும்.
  9. மசாலா வாடை போனதும் தேங்காய் பாலை ஊற்றவும். கொதிக்க ஆரம்பித்ததும் மீன் துண்டுகளை போடவும். 3 நிமிடங்களில் மீன் வெந்து விடும். தேங்காய் பாலும் அதிக நேரம் கொதிக்க கூடாது.
  10. மீன் வெந்ததும் மல்லித்தழை சேர்த்து அடுப்பை அணைக்கவும். சுவையான நெத்திலி மீன் குழம்பு ரெடி.

Monday, November 7, 2016

ஹெல்த் கேர் பத்திரிகையில் என்னுடைய ரெசிபி !


நவம்பர் 2016 ஹெல்த் கேர் மாத இதழ் பத்திரிக்கையில் என்னுடைய இட்லி மஞ்சூரியன் ரெசிபி வெளி வந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

Related Posts Plugin for WordPress, Blogger...