Tuesday, February 28, 2017

கதம்ப பொரியல் / Mixed vegetable poriyal

வார இறுதியில் சில காய்கள் மீதி இருந்தது. எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து கதம்ப பொரியலாக பன்னினேன். இனி கதம்ப பொரியல் எப்படி செய்வதென்று பார்ப்போம் !


பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. காலி பிளவர் - 100 கிராம் 
  2. கேரட் - 1
  3. சிறிய பீட்ரூட் - 1
  4. முள்ளங்கி - 1
  5. மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி 
  6. மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி 
  7. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி 
  8. தேங்காய் துருவல் - 2 மேஜைக்கரண்டி 
  9. உப்பு - தேவையான அளவு 
தாளிக்க -
  1. எண்ணெய் - 4 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1/2 தேக்கரண்டி 
  3. உளுந்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி 
  4. பெரிய வெங்காயம் - 1
  5. கறிவேப்பிலை - சிறிது 
செய்முறை -
  1. காலி பிளவரை வெந்நீரில் 5 நிமிடம் வைத்து எடுத்து விடவும். காலி பிளவர், வெங்காயம் இரண்டையும் பொடிதாக நறுக்கி வைக்கவும். கேரட், பீட்ரூட், முள்ளங்கி மூன்றையும் தோல் சீவி துருவிக்கொள்ளவும். 
  2. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  3. வெங்காயம் பொன்னிறமானதும் நறுக்கி வைத்துள்ள காலிபிளவர், துருவி வைத்துள்ள கேரட், பீட்ரூட், முள்ளங்கி, மஞ்சள் தூள் சிறிது தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து நன்றாக கிளறவும்.
  4. நன்கு வெந்ததும் மிளகாய் தூள், மிளகுத்தூள்  தேங்காய்  துருவல் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக கிளறவும்.  சுவையான  கதம்ப பொரியல் ரெடி !

Friday, February 24, 2017

வீட்டில் மஞ்சள் தூள் தயாரிக்கும் முறை / Home made Turmeric powder

ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் மஞ்சள் கிழங்கு எல்லா இடங்களிலும் கிடைக்கும். இந்த மஞ்சள் கிழங்கை உபயோகித்து நாம் வீட்டில் மஞ்சள் தூள் செய்து வைத்துக்கொள்ளலாம். இனி வீட்டில் மஞ்சள் தூள் எப்படி செய்வதென்று பார்ப்போம் !

தேவையான பொருள்கள் -
  1. மஞ்சள் கிழங்கு - 1/2 கிலோ 

செய்முறை -
  1. மஞ்சள் கிழங்குகளை தண்ணீரில் 2 மணி நேரம் ஊற வைக்கவும். ஊற வைப்பதால் கிழங்கிலுள்ள மண் எல்லாம் அடியில் தங்கி விடும். பிறகு தண்ணீரை நன்கு வடித்து விட்டு வேறு தண்ணீர் ஊற்றி நன்றாக கழுவி தனியே எடுத்து வைக்கவும்.
  2. ஒரு வாயகன்ற பாத்திரத்தில் மஞ்சள் கிழங்குகளை போட்டு கிழங்குகள் மூழ்கும்  அளவுக்கு  தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும்.கொதிக்க ஆரம்பித்ததும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து 10 நிமிடம் கொதிக்க விடவும்.
  3. பிறகு தண்ணீரை வடித்து விட்டு சிறிது நேரம் ஆற விடவும். ஆறிய பிறகு வட்ட வட்டமாக வெட்டி வைக்கவும். வெட்டும் போது கையில் கிளவுஸ் மாட்டிக்கொண்டு வெட்டவும். கிளவுஸ் மாட்டாமல் வெட்டினால் கை எல்லாம் மஞ்சளாகி விடும்.
  4. வெட்டிய மஞ்சள் கிழங்குகளை வெயில் படும் இடங்களில் அல்லது மொட்டை மாடியில் 3 நாட்கள் வரை காய வைக்கவும். 
  5. காய்ந்த மஞ்சள் துண்டுகளை மிஷினில் கொடுத்து திரிக்கவும். திரித்த மஞ்சள் பொடியை ஒரு காற்றுப் புகாத பாட்டிலில் எடுத்து வைக்கவும். அரைக்கிலோ அளவுக்கு கால் கிலோ மஞ்சள் தூள் கிடைக்கும்.

Tuesday, February 21, 2017

வரமல்லி சட்னி / முழு கொத்தமல்லி சட்னி / Coriander Seeds Chutney


பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. தேங்காய் துருவல் - 1/2 கப் 
  2. முழு கொத்தமல்லி - 1 மேஜைக்கரண்டி 
  3. உளுந்தம்பருப்பு - 1 மேஜைக்கரண்டி 
  4. கடலைப்பருப்பு - 1 மேஜைக்கரண்டி 
  5. மிளகாய் வத்தல் - 2
  6. புளி - சிறிது 
  7. உப்பு - தேவையான அளவு 
தாளிக்க -
  1. நல்லெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1 தேக்கரண்டி 
  3. கறிவேப்பிலை - சிறிது 
செய்முறை -
  1. அடுப்பில் வெறும் கடாயை வைத்து சூடானதும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து முழு கொத்தமல்லி, உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு போட்டு நன்கு வறுக்கவும்.
  2. பிறகு அதனுடன் மிளகாய் வத்தல், புளி, தேங்காய்  துருவல் மூன்றையும் சேர்த்து லேசாக வறுத்து சிறிது நேரம் ஆறவிடவும்.
  3. நன்கு ஆறியதும் வறுத்த பொருள்களோடு உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.
  4. அடுப்பில் கடாயை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியில் ஊற்றவும். சுவையான வரமல்லி சட்னி ரெடி. இட்லி. தோசையுடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.

Thursday, February 9, 2017

உளுந்தங் கஞ்சி / Uluntha Kanji

பரிமாறும் அளவு - 2 நபருக்கு

 தேவையான பொருள்கள் -
  1. தோல் உளுந்து - 1/2 கப் 
  2. பச்சரிசி - 1/4 கப் 
  3. தேங்காய் துருவல் - 1/2 கப் 
  4. கருப்பட்டி - 1/4 கப் 
  5. பூண்டு பற்கள் - 4
  6. வெந்தயம் - 1 தேக்கரண்டி 
  7. உப்பு - 1/4 தேக்கரண்டி
     
செய்முறை -
  1. தேங்காய் துருவலுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து தேங்காய் பால் எடுத்து வைக்கவும். ஒரு வாயகன்ற பாத்திரத்தில் கால் கப் தண்ணீருடன் கருப்பட்டியை சேர்த்து கொதிக்க விடவும். கருப்பட்டி கரைந்ததும் வடி கட்டி வைக்கவும்.
  2. குக்கரில் உளுந்தம்பருப்பு , பச்சரிசி இரண்டையும் ஒன்றாக சேர்த்து நன்றாக கழுவி அதனுடன் 5 கப் தண்ணீர், உப்பு,மற்றும் வெந்தயம், பூண்டு சேர்த்து மூடி அடுப்பை மிதமான சூட்டில் வைக்கவும்.
      
  3. நீராவி வந்ததும் வெயிட் போட்டு 5 விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
  4. நீராவி அடங்கியதும் மூடியை எடுத்து ஒரு மத்து அல்லது கரண்டி கொண்டு நன்றாக மசிக்கவும். 
  5. பிறகு அதனுடன் கரைத்து வைத்துள்ள கருப்பட்டி தண்ணீர், தேங்காய் பால் இரண்டையும் சேர்த்து நன்றாக கலக்கி விடவும். 
  6. கெட்டியாக இருந்தால் ஒரு கப் வெந்நீர் சேர்த்துக்  கொள்ளவும். சுவையான உளுந்தங் கஞ்சி ரெடி.

Tuesday, February 7, 2017

ஹெல்த் கேர் பத்திரிக்கையில் என்னுடைய சுரைக்காய் அடை ரெசிபி !

                                
பிப்ரவரி 2017 ஹெல்த் கேர் மாத இதழ் பத்திரிக்கையில் என்னுடைய சுரைக்காய் அடை ரெசிபி வெளி வந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அனைவரிடம் தெரிவித்துக்கொள்கிறேன்.

நன்றி
சாரதா
                                                                                                                                                                                          




Related Posts Plugin for WordPress, Blogger...